இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் மேற்கொள்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். மீன் பிடிக்கிறார்கள் என்பதற்காகவே சுடக்கூடிய ஒரே நாடு இலங்கை. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது என்றே கொள்ளலாம். இந்தியாவின் நேச நாடு என்று கூறுவது இப்படி நடந்து கொள்ளுமா என்று அவர் கூறினார்.